சிறுவர் பாடல்கள்

அம்மாவின் அன்பு...

தரம் 1

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா

புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்
பூவுஞ் சூட்டும் அம்மா
அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா

பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்
தோளிற் போடும் அம்மா

பாப்பா மலர்ப் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் துாக்கும் அம்மா.

இளமைப்பருவம்...

இளமைப்பருவம் இனிய பருவம்

எழுச்சி நல்கும் பருவம்
விளையும் அன்பும் தொண்டும் வாழ்வில்
விருந்து செய்யும் பருவம்

மலையைத் தூக்கி தலையில் வைக்க
மார்பு தட்டும் பருவம்
கலைகள் கற்று புலமையாலே
கருத்து மலரும் பருவம்

நாட்டை மொழியை அடிமை ஆக்க
நாங்கள் இங்கு வாழ்வோம்
ஈட்டி முனையில் உயிரைக் கொடுப்போம்
என்றெழும்பும் பருவம்

இன்னல் கோடி வாழ்வில் வந்து
எதிர்த்து நின்ற போதும்
தன்னை லத்தைப் பேணி டாத
சால்பு கொண்ட பருவம்

சென்ற கால நிகழுங் காலச்
செயல்கள் யாவும் தேர்ந்தே
என்று வாழும் எதிர்காலத்தை
இயற்றும் இளமைப் பருவம்

இனிய மொழிகள்...

 

தரம் 5

இனிய மொழிகள் பேசி நீங்கள்
இன்பம் எய்த வேண்டும்
கனியைத் தின்று மகிழும் இன்பம்
கண்டு வாழ வேண்டும்

எல்லோருக்கும் இன்பம் ஈதல்
இனிய மொழியால் ஆகும்
நல்ல அன்பும் நண்பும் புகழும்
நன்மை வந்து சேரும்

அல்லல் அகலும் செல்வம் குவியும்
அருளும் சுரந்து பாயும்
நல்ல இனிய மொழிகள் கூறி
நாங்கள் சேர்ந்து வாழ்வோம்

ஊஞ்சல் ஆடுவோம்...

தரம் 3, 4

ஊஞ்சல் கட்டி ஆடுவோம்
ஊஞ்சல் கட்டி ஆடுவோம்
உயர மான மரத்திலே
ஊஞ்சல் கட்டி ஆடுவோம்

வலித்து மேலே ஏறுவோம்
வந்து கீழே சேருவோம்
குலுக்கி மரத்தை ஆடுவோம்
குருவி நுழைந்தும் ஓடுவோம்

கூடிக் கூடி ஆடுவோம்
கும்மி கொட்டிப் பாடுவோம்
தேடி வந்த சேயுடன்
சேர்ந்து ஊஞ்கல் ஆடுவோம்

தம்பி வந்து பாரெடா
தமிழும் ஊஞ்சல் ஆடிறாள்
வெம்பி வெம்பி அழுதவள்
மெத்தப் புளுகாய் ஆடிறாள்

எண்ணிப் பத்து முறைக்குமேல்
இருந்து கண்ணன் ஆடிறான்
கண்ணீர் விட்டுக் கதறுவாள்
கமலராணி ஆடட்டும்

எங்கள் வீட்டுப் பூனை ...

தரம் 2, 3

சின்னச் சின்னப் பூனை
சிறந்த நல்ல பூனை
என்னைப் பார்த்துத் துள்ளும்
எங்கள் வீட்டுப் பூனை

வட்ட மான கண்கள்
வண்ண மான செவிகள்
கட்டை யான கால்கள்
காட்டும் நல்ல பூனை

பாலைக் குடிக்கப் பார்க்கும்
பதுங்கி இருக்கும் பரணில்
வாலைப் பற்றி இழுத்தால்
வளைந்து கையைக் கடிக்கும்.

நாயைப் பார்த்துச் சீறும்
நகத்தால் மரத்தைக் கீறு
பாயப் பதுங்கி ஓடும்
பந்தை உருட்டி ஆடும்

எலியைக் கிளியைப் பிடிக்கும்
ஏறி மரத்தில் நடிக்கும்
புலியைப் போல இருக்கும்்
புள்ளிக் கோட்டுப் பூனை

உண்ணுஞ் சோறும் பாலும்
ஊட்டி வளர்த்த பூனை
கண்ணைப் போன்ற பூனை
கட்டிக் கரும்புப் பூனை

குயில்...

தரம் 1, 2, 3

கூகூ கூகூ கூகூ என்று
கூவிக் கீதம் பாடுவேன்
கூடி வாழும் சோடிக் குயிலைக்
கூவிக் கூவித் தேடுவேன்

காகம் என்று நீங்கள் என்னைக்
கருதிக் கொள்ள வேண்டாம்
காதில் இனிக்கக் கூவும் குரலால்
கண்டு கொள்வீர் என்னை

பார்க்க நானும் கறுப்பு நிறந்தான்
பாடும் குரலைக் கேளும்
பாலும் தேனும் கரம்பும் போலப்
பாடும் குரலைக் கேளும்.

காகக் கூட்டில் முட்டை இடுவேன்
காகம் குஞ்சு பொரிக்கும்
காலஞ் செல்ல எனது குஞ்சு
கனிந்த குரலில் கூவும்

கூவுங் குரலைக் கேட்ட காகம்
குஞ்சைக் கொத்திக் கலைக்கும்
கூவிக் கூவி எனது குஞ்சு
கூட்டை விட்டு பறக்கும்

குஞ்சை நானும் கூட்டிக் கொண்டு
கூவிக் கூவித் திரிவேன்
கூகூ கூகூ கூகூ என்று
கூவிக் கூவித் திரிவேன்

காகக் கூட்டில் முட்டை இட்ட
கள்ளக் குயிலோ நானும்
கல்லும் கனியக் கூவும் குரலைக்
காது கொடுத்துக் கேளும்

பந்தடிப்போம் நாங்கள்...

 

தரம் 2

 

 

பந்தடிப்போம் பந்தடிப்போம்
பந்தடிப்போம் நாங்கள்
பாய்ந்துதுள்ளி ஓடிஆடிப்
பந்தடிப்போம் நாங்கள்

 

எங்கள்பக்கம் வெற்றிகொள்ளும்
என்றெதிர்த்துக் கூறி
எதிரெதிராய் நின்றுபந்தை
எடுத்தெறிந்து மாறிப்-பந்தடிப்போம்

 

உச்சிவானில் உயரும் பந்தை
ஓடிக்கையால் ஏந்தி
அச்சமின்றி எவர்வரினும்
ஆர்ப்பரித்துப் பாய்ந்து-பந்தடிப்போம்

 

வந்தபந்தை மறித்தடித்து
மற்றப்பக்கம் போக்கி
மண்டியிட்டுக் கைகளினால்
மாற்றுப்பந்தைத் தாக்கிப்-பந்தடிப்போம்

 

விழுந்துயர்ந்த பந்தைத்தட்டி
வீரமுடன் கூடி
வெற்றிவெற்றி யென்றுசொல்லி
வெற்றிப்பாட்டுப் பாடிப்-பந்தடிப்போம்

 

 

பாட்டி...

தரம் 1 , 2

அன்பு நிறைந்த பாட்டி என்னை
அணைத்துத் துாக்கும் பாட்டி
இன்ப மான கதைகள் எல்லாம்
எனக்குச் சொல்லும் பாட்டி

வாழைப் பழமும் இனிப்பும் என்க்கு
வாங்கித் தந்த பாட்டி
தோளிற் கிடத்தி முதுகைத் தடவித்
துாங்க வைக்கும் பாட்டி

பள்ளிக் கூடப் பாடம் வீட்டில்
படிக்கச் சொல்லும் பாட்டி
துள்ளிக் குதித்து மண்ணில் வீழ்ந்தால்
துடைத்துக் கழுவும் பாட்டி

கோவிலுக்குப் போகும் போது
கூட்டிச் செல்லும் பாட்டி
கும்பிடுநீ கும்பி டென்று
குனிந்து சொல்லும் பாட்டி

அப்பா அம்மா அடிக்க வந்தால்
அலறித்தடுக்கும் பாட்டி
தப்பாய் நானும் பிழைகள் செய்தால்
தானே புலம்பும் பாட்டி

அவ்வைப் பாட்டி பாடித் தந்த
ஆத்தி சூடிப் பாட்டை
செவ்வையாகப் பாடச் சொல்லிச்
சிந்தை மகிழும் பாட்டி.

புள்ளிக் கோழி...

தரம் 1, 2

புள்ளிக் கோழி எங்கள் கோழி
பொரித்த குஞ்சு பத்து
வெள்ளைக் குஞ்சு மூன்று நல்ல
வெடிவால் குஞ்சு ஏழு

கொக்கொக் கொக்கோ என்று குஞ்சைக்
கூட்டிக் கொண்டு திரியும்
பக்கத் திலே காகம் வந்தால்
பறந்து பறந்து கலைக்கும்

தம்பிக் குஞ்சு சத்தம் போட்டால்
தலையைத் தூக்கிப் பார்க்கும்
குப்பை கிளறிப் புச்சி புழுக்கள்
கொத்தித் தின்னக் கொடுக்கும்

காற்றுக் கிளைகள் ஆடினாலும்
காதைக் கொடுத்துக் கேட்கும்
சோற்றைப் போட்டால் குஞ்சைக் கூவிச்
சொண்டால் கிளறிக் காட்டும்

வட்டமிட்டுப் பருந்து வந்து
வானத் திலே பறந்தால்
செட்டைக் குள்ளே குஞ்சை வைத்துத்
தெய்வம் போலக் காக்கும்

மயில்...

தரம் 1, 2

மழை முகிலுங் கூடுது
வண்ண மயிலும் ஆடுது
அழகுத் தோகை விரித்து நின்று
ஆனந்தமாய் ஆடுது

நீலத்தோகை பொன் சொரிய
நின்று கூத்துப் போடுது
நீண்ட காலைத் தூக்கி மயிலும்
நின்று கூத்துப் போடுது

கோல மயிலின் கூத்தைக் கண்டு
குரங்கு தாளம் போடுது.
கொப்புக் கொப்பாய்த் தாவிப் பாய்ந்து
குரங்கு தாளம் போடுது.

வானம் பாடி மயிலின் கூத்தை
வாழ்த்திப் பாட்டு பாடுது
வண்ணக் கிளியும் வந்திருந்து
மயிலின் கூத்தைப் பார்க்குது

மானும் புலியின் பக்கம் நின்று
மயிலின் கூத்தைப் பார்குது
மலைறைப் போல யானை நின்று
மயிலின் கூத்தைப் பார்க்குது.

நஞ்சைக் கக்கும் நாகபாம்பு
நடிக்கும் மயிலைப் பார்க்குது
அஞ்சிப் புற்றில் ஒளித்திடாமல்
அருகில் நின்று பார்க்குது.

கொல்லும் வேடன் வில்லும் நழுவக்
கூத்தைப் பார்த்துக் களிக்கிறான்
குறத்தி மயிலின் கூத்தைக் கண்டு
குதித்துக் குதித்துக் நடிக்கிறாள்.

வெண்ணிலா...

தரம் – 4

பாலைப் போல வெண்ணிலா
பார்க்க நல்ல வெண்ணிலா
கோல வானில் நின்றொளியைக்
கொட்டு கின்ற வெண்ணிலா

வெள்ளிக் கூட்டம் சுற்றி நிற்க
விளங்கு கின்ற வெண்ணிலா
அள்ளி அள்ளிச் சோற்றையுட்டி
அம்மா காட்டும் வெண்ணிலா

கரிய முகிலுள் ஒளித்துக்
கள்ளம் பழகும் வெண்ணிலா
தெரியவில்லை என்று தம்பி
தேடிச் சிணுங்கும் வெண்ணிலா

கலா தம்பி காந்தியோடு
கையைக் கோர்த்துக் கொண்டு
நிலா நிலா என்று கூவி
நின்று துள்ளும் வெண்ணிலா

ஆறுமுக நாவலர்...

தரம் 5

ஆறுமுக நாவலர்
அருந்தமிழின் காவலர்
வீறுகொண்டு சைவத்தின்
மேன்மைதந்த கோனவர்

நல்லூரிலே பிறந்தவர்
நல்லறிவு நிறைந்தவர்
எல்லோருக்கும் இனியவர்
ஈசனையே பணிபவர்

திருக்குறளை மிகமிகத்
திருத்தமாகப் பதித்தவர்
இருக்குமுதல் வேதங்கள்
இயம்பும் நெறியை மதித்தவர்

கந்தபுராணங் கற்றவர்
கருணையுள்ளம் பெற்றவர்
சிந்தைசெயலில் தூயவர்
சித்தாந்தமே ஆய்பவர்

பேச்சில்மிகவும் வல்லவர்
பிறர்மதத்தை வெல்பவர்
மூச்சும்தமிழ்க்காய் விட்டவர்
மும்மலத்தைச் சுட்டவர்

தென்னாட்டிலும் ஈழத்தின்
சிறப்பைநாட்டி வைத்தவர்
பொன்னாட்டினும் புரவலன்
போற்றுமெங்கள் நாவலன்